வயலில் சோளப்பயிரை சேதப்படுத்திய விவகாரம்: செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்


வயலில் சோளப்பயிரை சேதப்படுத்திய விவகாரம்: செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்
x

தரகம்பட்டி அருகே வயலில் சோளப்பயிரை சேதப்படுத்திய விவகாரத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

கரூர்

இருதரப்பினர் தகராறு

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள செங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). அதே பகுதியை சேர்ந்தவர் ராசு (51). இவர்கள் 2 பேருக்கும் விவசாய நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் ராமசாமி தனது வயலில் சோளம் சாகுபடி செய்து பராமரித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராசு எனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் எப்படி சோளம் சாகுபடி செய்யலாம் என்று ராமசாமியிடம் கேட்டுள்ளார்.

இதனால் ராசுவின் தரப்பினருக்கும், ராமசாமி தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ராசு ஒரு டிராக்டரை வாடகைக்கு எடுத்து வந்து ராமசாமி சாகுபடி செய்த சோளப்பயிர்களை சேதப்படுத்தி அழித்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இதையடுத்து இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து, இரு தரப்பினரையும் அழைத்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல்

அப்போது, ராமசாமி தரப்பினை சேர்ந்த தங்கவேல் (52)என்ற விவசாயி, சோளப்பயிரை அழித்த டிராக்டரை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு போலீசார் முழுமையான விசாரணை முடிந்தவுடன் சேர்த்து கொள்ளலாம் என கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து தங்கவேல், டிராக்டரையும் வழக்கில் சேர்த்து, அதனை இயக்கியவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, ரெட்டியபட்டியில் உள்ள 200 அடி உயரம் கொண்ட செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பாலவிடுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் யசோதா, பாலவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், நிர்வாக அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தங்கவேலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு தங்கவேல் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வர முயன்றார். ஆனால் அவர் சோர்வாக இருந்ததால் கீழே இறங்க முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் செல்போன் கோபுரத்தில் ஏறி தங்கவேலுவை பத்திரமாக மீட்டு கீழே இறக்கினர். இதனால் அந்த பகுதியில் நேற்று மதியம் 12 மணி முதல் 2 மணி வரை பரபரப்பாக காணப்பட்டது.


Next Story