பற்களை பிடுங்கிய விவகாரம்: விசாரணையை தொடங்கினார் அமுதா ஐ.ஏ.எஸ்..!


பற்களை பிடுங்கிய விவகாரம்: விசாரணையை தொடங்கினார் அமுதா ஐ.ஏ.எஸ்..!
x
தினத்தந்தி 10 April 2023 7:53 AM GMT (Updated: 10 April 2023 9:59 AM GMT)

பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அம்பை தாலுகா அலுவலகத்தில் இருந்து விசாரணை அதிகாரி அமுதா விசாரணையை தொடங்கியுள்ளார்.

அம்பை,

நெல்லை மாவட்டம் அம்பை சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரையடுத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இதுதவிர அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி பகுதி போலீஸ் அதிகாரிகள் சிலர் காத்திருப்போர் பட்டியலுக்கும், ஆயுதப்படைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவுப்படி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை மேற்கொண்டார். அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை தமிழக அரசு நியமித்தது. இதையடுத்து விசாரணை அதிகாரி அமுதா நேற்று நெல்லை வந்தார். தொடர்ந்து கலெக்டரிடம் சம்பவம் குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் நேற்று மாலையில் அதிகாரி அமுதா, தனது விசாரணையை தொடங்கினார். அப்போது சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் தனது விசாரணை தொடர்பாக நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு அம்பை தாலுகா அலுவலகத்தில் இருந்து அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணையை தொடங்கினார். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே சப்-கலெக்டரிடம் வாக்குமூலம் அளித்தவர்களில் ஒரு சிலர் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி நடந்தவற்றை கூறினர். அதனை அவர் பதிவு செய்து கொண்டார். இதனையொட்டி தாலுகா அலுவலகத்தின் நுழைவு வாயில் கதவு இழுத்து பூட்டப்பட்டது. போலீசார் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை தவிர வேறு யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

தொடர்ந்து விசாரணை அதிகாரி அமுதா, உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உடன் தனிப்படையில் பணியாற்றியவர்கள், தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகள், காத்திருப்போர் பட்டியலில் உள்ள போலீசார் என அனைத்து தரப்பினரிடமும் விரிவான விசாரணை நடத்த உள்ளார்.

அதேபோல் கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், அம்பை போலீஸ் நிலையங்களிலும் நேரடியாக சென்று விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story