சேதுபாவாசத்திரம் கடைமடையில் ஏரி, குளங்கள் நிரம்பவில்லை


சேதுபாவாசத்திரம் கடைமடையில் ஏரி, குளங்கள் நிரம்பவில்லை
x

மேட்டூர் அணை திறந்து 98 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் சேதுபாவாசத்திரம் கடைமடையில் ஏரி, குளங்கள் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்;

மேட்டூர் அணை திறந்து 98 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் சேதுபாவாசத்திரம் கடைமடையில் ஏரி, குளங்கள் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

கடைமடைக்கு தண்ணீர்

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு போகம் சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு நல்ல மகசூல் தரக்கூடிய ஆடிப்பட்டம் கைகூடும் என விவசாயிகள் கருதி இருந்தனர். ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்பு காணல் நீராகி விட்டது. காரணம் அணை திறந்த நாள்முதல் கடைமடைக்கு 5 நாட்கள் வீதம் முறைவைத்து தண்ணீர் வழங்குவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்தும் ஒரு முறை கூட 5 நாட்கள் கடைமடைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

98 நாட்கள்

இதனால் மேட்டூர் அணை திறந்து 98 நாட்களை கடந்த நிலையிலும் சேதுபாவாசத்திரம் கடைமடையில் இன்னும் விவசாயிகள் விதை நெல்லை கையில் எடுக்கவில்லை.மேலும் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி தரக்கூடிய விளங்குளம், சோலைக்காடு, பெருமகளூர், ஊமத்தநாடு, ரெட்டவயல், நாடியம், கொரட்டூர் போன்ற பெரிய ஏரிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட சிறு குளங்கள் இன்று வரை நிரம்பவில்லை. 100 அடி தண்ணீர் இருந்த நிலையில் திறக்கப்பட்ட மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்துவிட்டது. முறையாக தண்ணீர் கிடைக்காமல் கடைமடையில் ஆடிப்பட்டம் கைவிட்டு போனதை நினைத்து விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இனிவரும் நாட்களிலாவது கடைமடைக்கு முறைவைக்காமல் தொடர்ந்து 15 நாட்களாவது தண்ணீர் வழங்கினால்தான் நாற்றுவிடும் பணியை தொடங்க முடியும் என கடைமடை விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.


Next Story