ஓட, ஓட விரட்டி நில புரோக்கர் குத்திக் கொலை


ஓட, ஓட விரட்டி நில புரோக்கர் குத்திக் கொலை
x

நாகர்கோவிலில் பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி நில புரோக்கரை குத்திக் கொன்று விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி நில புரோக்கரை குத்திக் கொன்று விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.

நில புரோக்கர்

குமரி மாவட்டம் கருங்கல் கப்பியறை அருகே புதுக்காடு செட்டிவிளையை சோ்ந்தவர் சேவியர் பாபு (வயது 57), நில புரோக்கர். இவருடைய மனைவி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 2 மகள்கள் திருமணமாகி குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். தற்போது சேவியர் பாபு நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் சேவியர் பாபு நேற்று மதியம் 2.15 மணி அளவில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் அருகே தன் நண்பரான கார்களை வாங்கி விற்று வரும் செல்வராஜ் என்பவருடன் ஸ்கூட்டரில் சென்றார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சேவியர் பாபுவை வழிமறித்து தகராறு செய்துள்ளார்.

ஓட, ஓட விரட்டி குத்திக்கொலை

பின்னர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சேவியர் பாபு வயிற்றில் குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த நண்பருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத சேவியர் பாபு உயிர் பயத்துடன் அங்கிருந்து ரத்தம் சொட்ட சொட்ட ஓடினார். அருகில் இருந்த திருமண மண்டபத்துக்கு பின்புறம் உள்ள சாலையில் ஓடினார். எனினும் அந்த மர்ம நபர் சேவியர் பாபுவை விடாமல் துரத்தினார். அதிக ரத்தம் வெளியேறியதால் சேவியர் பாபுவால் தொடர்ந்து ஓட முடியவில்லை. சுமார் 50 மீட்டர் தூரம் ஓடிய நிலையில் சாலையோரம் நிறுத்தி இருந்த ஒரு காரின் அருகே சுவரில் சாய்ந்துள்ளார்.

அந்த சமயத்தில் துரத்தி வந்த மர்ம நபர், சேவியர் பாபுவை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சேவியர் பாபு அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கோட்டார் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளி விட்டு சென்ற மோட்டார் சைக்கிள்

மேலும் சேவியர் பாபுவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சேவியர் பாபுவை கொலை செய்த மர்ம நபர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இதைத் தொடர்ந்து நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் அங்கு படிந்திருந்த ரத்த கறையை போலீசார் சேகரித்தனர். கொலை நடந்த இடத்தில் மர்ம நபர் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்றுள்ளாரா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஒரு தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் பேக் அங்கு கிடந்தது. அந்த பேக்கை தப்பிச் சென்ற மர்ம நபர் கொண்டு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொலை செய்து விட்டு தப்பிச் செல்லும் அவசரத்தில் அந்த பேக்கை அங்கேயே விட்டு ஓடியிருக்கலாம் என தெரிகிறது.

இதை வைத்து பாாக்கும் போது அவர் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட உணவு டெலிவரி நிறுவனத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் கத்தியால் குத்தி நில புரோக்கர் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆசாமியை தேடிவருகின்றனர்.


Next Story