வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் நகை-பணம் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் நகை-பணம் கொள்ளை
கோவை
கோவை ராமநாதபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவையில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதுகுத்தும் விழா
கோவை ராமநாதபுரத்தை அடுத்த நஞ்சுண்டாபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 57). இவருடைய மனைவி லலிதா (54). இவர்கள் 2 பேரும் லாண்டரி கடை வைத்து, அதில் வேலை செய்து வந்தனர்.இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
அதில் 2 மகள்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. 3-வது மகள் கோவையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ராமச்சந்திரனின் பேத்திகளுக்கு கோவை டவுன்ஹாலில் உள்ள ஒரு கோவிலில் கடந்த 23-ந் தேதி காது குத்தும் விழா நடந்தது.
வீட்டின் பூட்டு உடைப்பு
இந்த விழாவில் பங்கேற்பதற்காக ராமச்சந்திரன் தனது மனைவி மற்றும் மகளுடன், வீட்டை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்கதவில் போடப்பட்டு இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு துணிகள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன. அதில் இருந்த 34 பவுன் நகை, ரூ.7½ லட்சம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது.
ரூ.20 லட்சம் நகை-பணம் கொள்ளை
கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.மேலும் கை ரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான கைரேகை தொடர்பாக ஆய்வு செய்தனர். அப்போது அதில் 2 நபர்களின் ரேகைகள் பதிவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, ராமச்சந்திரன்-லலிதா தம்பதியின் இளைய மகள் சம்பாதித்த பணம் மற்றும் தாங்கள் சம்பாதித்த பணத்தில் அவளுடைய திருமணத்துக்காக நகை-பணம் சேர்த்து வைத்து உள்ளனர்.
அவற்றைதான் மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச்சென்று உள்ளனர். எனவே அந்த நபர்களை வலைவீசி தேடி வருகிறோம் என்றனர்.