கல்லூரி மாணவர் கொலையில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரணை


கல்லூரி மாணவர் கொலையில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரணை
x
தினத்தந்தி 15 Sep 2023 6:45 PM GMT (Updated: 15 Sep 2023 6:46 PM GMT)

மரக்காணத்தில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். கூட்டாளிகளுடன் சேர்ந்து கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.

விழுப்புரம்

மரக்காணம்

கல்லூரி மாணவர் கொலை

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் அண்ணா நகரை சேர்ந்த கந்தன் மகன் அபிஷேக் (வயது 23). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கானா பாடல் பாடுவதில் அபிஷேக் பிரபலமானவர்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி அபிஷேக் உறவினர்களுடன் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரையாக சென்றார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கைப்பாணி என்ற இடத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

கோர்ட்டில் சரண்

இந்த கொலை தொடர்பாக மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளான அருண், பிரபாகரன், வைரமணி, விஜய், சஞ்சய், சேதுராமன் உள்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த மோகன் (27) என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் அவர், சென்னை பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கொலை வழக்கில் அரக்கோணம் கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் அவர் வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைப்பு

அபிஷேக் கொலை வழக்கை விசாரித்து வந்த மரக்காணம் போலீசார் மோகனை கோர்ட்டு அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோஷ்டி மோதலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கூட்டாளிகளுடன் சேர்ந்து அபிஷேக்கை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து கொலைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story