கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டவர் கோர்ட்டில் சரண்
நிதி நிறுவனம் நடத்தி ஆன்லைன் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டவர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். முக்கிய ஆசாமி மனைவி மற்றும் தம்பியுடன் துபாயில் பதுங்கி உள்ளார்.
கோவை,
நிதி நிறுவனம் நடத்தி ஆன்லைன் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டவர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். முக்கிய ஆசாமி மனைவி மற்றும் தம்பியுடன் துபாயில் பதுங்கி உள்ளார்.
கோடிக்கணக்கில் மோசடி
கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் விமல்குமார். இவர் காளப்பட்டி பகுதியில் அல்பா போரெக்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 8 முதல் 20 சதவீதம்வரை வட்டி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்தார்.
ஆன்லைன் மூலம் கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்துவிட்டு விமல்குமார் தலைமறைவாகிவிட்டார்.
7 பேர் மீது வழக்குப்பதிவு
கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் தொடர்ந்து புகார் செய்து வருகிறார்கள். இந்த மோசடி தொடர்பாக அதன் உரிமையாளர் விமல்குமார், அவருடைய மனைவி ராஜேஸ்வரி, தம்பி சந்தோஷ்குமார், மற்றும் அருண்குமார், கவிதா என்ற கங்காதேவி, யுவன், சுஜித் ஆகிய 7 பேர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
துபாயில் பதுங்கல்
இதில் முக்கிய ஆசாமியான விமல்குமாரும், அவருடைய மனைவி ராஜேஸ்வரியும், தம்பி சந்தோஷ்குமாரும் துபாயில் பதுங்கி உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை கைதுசெய்ய சர்வதேச போலீஸ் (இண்டர்போல்) உதவியை நாட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மற்ற ஆசாமிகளையும் போலீசார் தேடி வந்தனர்.
கோர்ட்டில் சரண்
இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த அருண்குமார் (வயது32), கோவை டேன்பிட் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அருண்குமார் பலரிடம் பணம் வசூலித்து கொடுக்கும் கலெக்சன் ஏஜென்டாக செயல்பட்டுள்ளார். இந்த வழக்கின் முழு தகவல்களை அறிய, அருண்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக விரைவில் கோவை டேன்பிட் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.