டிரைவரை தாக்கியவர் கைது
டிரைவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கைக்களநாட்டார் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது 58). இவர் உடையார்பாளையம்- செந்துறை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இப்பள்ளியில் இருந்து நடராஜன் என்பவர் தனது பேரக்குழந்தையை வெளியே அழைத்துக்கொண்டு வந்துள்ளார். அப்போது உடையார்பாளையம் வெள்ளைப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கொளஞ்சி(44) என்பவர் அந்த வழியாக லாரியை ஓட்டி வந்தார். அப்போது பள்ளியின் அருகே நின்று கொண்டு இருந்த நடராஜனிடம் தகராறு செய்துள்ளார். அதனை தட்டிக்கேட்ட பொன்னுசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி ஹெல்மெட்டால் அடித்து தாக்கி உள்ளார். இதில் பொன்னுசாமி பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் பொன்னுசாமி புகார் அளித்தார். புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் கொளஞ்சி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.