வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது
பாளையங்கோட்டை அருகே வாலிபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைமணி (வயது 35). இவருடைய மாமாவான முருகன் என்பவரிடம் நடுவகுறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற பாலா (36) என்பவர் அவரது மோட்டார் சைக்கிளை அடமானம் வைத்துள்ளார். இந்தநிலையில் அடகு வாகனத்தை சுடலைமணி ஓட்டி வந்துள்ளார். இதைக்கண்ட பாலா விவரம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சுடலைமணியும், அவருடைய மனைவி பரமேஸ்வரியும் சேர்ந்து அவர்களுடைய வீட்டிற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருவரையும் பாலா அவதூறாக பேசினார். மேலும் சுடலைமணியை அரிவாளால் வெட்டினார். மேலும் பரமேஸ்வரியையும் தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த இருவரும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிவு செய்து பாலாவை நேற்று கைது செய்தார்.