தம்பி கொலைக்கு பழிக்குப்பழியாக வாலிபரை தீர்த்துக்கட்டியவர் கைது
நெல்லையில் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்தவரை கொன்ற வழக்கில் துப்பு துலங்கியது. தம்பி கொலைக்கு பழிக்குப்பழியாக அவரை தீர்த்துக்கட்டியவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ் செல்வராஜ் (வயது 31). இவர் நேற்று முன்தினம் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே ஒரு கல்லறை தோட்டம் பகுதியில் உள்ள கட்டிடத்தில் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஜோஸ்செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
அதில் கொலைக்கான பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது, ேஜாஸ்செல்வராஜின் நண்பர் முத்துஹரி. இவரை கடந்த ஆண்டு பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு ேஜாஸ்செல்வராஜ் மதுக்குடிப்பதற்காக அழைத்து சென்றார். அப்போது, ஏற்பட்ட தகராறில் முத்துஹரியை ஜோஸ் செல்வராஜ் உள்பட 6 பேர் வீட்டு மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜோஸ் செல்வராஜ் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக நெல்லை கோர்ட்டில் அவர் ஆஜராகிவிட்டு வெளியே வந்தார்.
அப்போது, அங்கு முத்துஹரியின் அண்ணன் சந்தோஷ்குமார் (31), நண்பர்கள் செல்வகுமார் (30), பாலு (19), பாலசுப்பிரமணியன் (25) உள்ளிட்டவர்கள் ஜோஸ் செல்வராஜிடம் பேச்சுக்கொடுத்து நைசாக மதுகுடிக்க அழைத்து சென்றனர்.
புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கல்லறை தோட்டம் அருகே ஒரு கட்டிடத்தில் மது அருந்திக் கொண்டு இருந்தபோது, அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டது. இதையடுத்து முத்துஹரியின் கொலைக்கு பழிக்குப்பழியாக 4 பேரும் சேர்ந்து ஜோஸ் செல்வராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தோஷ்குமார், செல்வகுமார், பாலு, பாலசுப்பிரமணியன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.