வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
கோவை மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருப்பூரை சேர்ந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்
கோவை
கோவை மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருப்பூரை சேர்ந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
வெடிகுண்டு மிரட்டல்
கோவையில் உள்ள மத்திய சிறையில் தூக்கு தண்டனை, தண்டனை கைதி மற்றும் விசாரணை கைதி என்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி மத்திய சிறையில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.
உடனே அங்கிருந்த முத்துப்பாண்டி என்ற சிறை காவலர் எடுத்து பேசினார். அதில் மறுமுனையில் பேசிய நபர், கோவை மத்திய சிறையில் பணியாற்றும் சிறை காவலர்கள் சீருடை அணிந்து வெளியே வந்தால் அவர்களை கொலை செய்து விடுவேன் என்றும்,
கோவை மத்திய சிறையில் வெடிகுண்டு வைக்கப்போவதாகவும் மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறைகாவலர் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
தொழிலாளி கைது
இதை தொடர்ந்து அங்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் கோவை மத்திய சிறைக்கு சென்று மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.
அதில் எந்த வெடிபொருட்களும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி முதன்மை காவலர் பிரசாத் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. கோவை மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் திருப்பூர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த நாகராஜ் (வயது 38) என்பதும்,
ஏற்கனவே ஒரு வழக்கில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே சென்றவர் என்பதும் தெரியவந்தது.
இதை எடுத்து திருப்பூரில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.