ராணுவ வீரரின் பையை திருடியவர் கைது
கோவைக்கு வந்த ரெயிலில் ராணுவ வீரரின் பையை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் சுகேஷ் (வயது 38). சம்பவத்தன்று இவர் சென்னையில் இருந்து திருவனந்த புரத்திற்கு ரெயிலில் ஏ.சி.பெட்டியில் வந்தார்.
ரெயில் கோவை ரெயில் நிலையத்திற்கு வந்த போது அவர் தான் கொண்டு வந்த பொருட்களை சரி பார்த்தார்.
அப்போது அவரது பை காண வில்லை. அதை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கோவை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக் களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் வாலிபர் ஒருவர் ராணுவ வீரர் பயணித்த ஏ.சி. பெட்டியில் ஏறி, இறங்கு வதும், அவர் ராணுவ வீரரின் பையை திருடியதும் தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று காலை கோவை ரெயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ரத்திஷ் (35) என்பதும், அவர் தான் ராணுவ வீரர் சுகேஷின் பையை திருடியதும் தெரியவந்தது.
உடனே அவரை போலீசார் கைது செய்தனர். ராணுவ வீரரின் பையில் விலை உயர்ந்த பொருட்கள் இல்லாததால் தூக்கி வீசி விட்டதாக அவர் போலீசாரிடம் கூறினார்.
இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.