கஞ்சா கடத்த முயன்றவர் கைது
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் கஞ்சா கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் சட்ட விரோத பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அரக்கோணம் ரெயில் நிலையம் மற்றும் அரக்கோணம் வழியாக செல்லும் ரெயில்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி நேற்று அரக்கோணம் ரெயில் நிலையம் சுற்றியுள்ள பகுதியில் போதை பொருள் தடுப்பு போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டிக்கெட் கவுண்ட்டர் அருகே சந்தேகப்படும்படி கையில் 2 பைகளுடன் நின்றிருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த ஜெய்லுதீன் (வயது 53) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் ரெயிலில் கடத்தி செல்வதற்காக 9 பண்டல்களில் 11 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.
இதனையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து ஜெய்லுதீனை கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.