சிறுமிகளுக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
புதுப்பாளையம், வெம்பாக்கத்தில் சிறுமிகளுக்கு நடக்க இருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
புதுப்பாளையம், வெம்பாக்கத்தில் சிறுமிகளுக்கு நடக்க இருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
குழந்தை திருமணம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதனால் பல்வேறு திருமணங்கள் நடப்பது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கிராமப் பகுதிகளில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக தெரிகிறது. எனவே சமூக நலத்துறை அலுவலர்கள் கிராம பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி கடந்த வாரம் கலசபாக்கம் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
தடுத்து நிறுத்தம்
இந்த நிலையில் வெம்பாக்கம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இதேபோல புதுப்பாளையம் அருகே ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடுகளை பெற்றோர் செய்து வந்தனர். இந்த 2 திருமணங்களும் நேற்று நடைபெற இருந்தது.
இது தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து சமூகநலத்துறை அலுவலர்கள், போலீசார் சம்பந்தப்பட்ட 2 சிறுமிகளின் வீட்டிற்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
மேலும் குழந்தை திருமணம் செய்து வைக்கக் கூடாது என்று பெற்றோருக்கு அறிவுரையும் வழங்கினர். குழந்தை திருமணம் செய்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவது குறைந்து வருகிறது. எனினும் வறுமை, அறியாமை உள்ளிட்ட காரணங்களால் குழந்தை திருமணங்களை சிலர் ஆதரிக்கின்றனர்.
இது தொடர்பாக தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றனர்