தீக்குளித்த மெக்கானிக் சிகிச்சை பலனின்றி சாவு
வால்பாறையில் குடும்ப தகராறில் தீக்குளித்த மெக்கானிக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற மனைவியும் பரிதாபமாக இறந்தார்.
வால்பாறை
வால்பாறையில் குடும்ப தகராறில் தீக்குளித்த மெக்கானிக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற மனைவியும் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தீக்குளித்த மெக்கானிக்
வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் முதல் பிரிவை சேர்ந்தவர் சபரி (வயது 41). இவர் தேயிலை தொழிற்சாலையில் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி முத்துமாரி (36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் சொத்தை விற்பனை செய்வது தொடர்பாக சபரிக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 10-ந் தேதி கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சபரி வீட்டில் இருந்த டீசலை எடுத்து ஊற்றி தீக்குளித்தார்.
இதனைக்கண்ட முத்துமாரி தீயை அணைக்க முயன்றார். அப்போது அவர் மீது தீ பிடித்தது. இருவர் மீதும் தீப்பற்றி எரிந்ததால் வலி தாங்க முடியாமல் அலறினர். அவர்களின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சபரி-முத்துமாரி தம்பதியை வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
கணவன்-மனைவி சாவு
அவர்களுக்கு 65 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்ததால் வால்பாறை ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சபரி பரிதாபமாக உயிரிழந்தார். அவரை தொடர்ந்து அவரது மனைவி முத்துமாரியும் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறில் தீக்குளித்த தொழிலாளியும், காப்பாற்ற முயன்ற மனைவியும் தீயில் கருகி பலியான சம்பவம் வால்பாறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.