பாம்புகடி சிகிச்சைக்கு மருந்து தட்டுப்பாடு


பாம்புகடி சிகிச்சைக்கு மருந்து தட்டுப்பாடு
x

பாம்புகடி சிகிச்சைக்கு மருந்து தட்டுப்பாடு

திருப்பூர்

தளி

உடுமலையில் அரசு ஆஸ்பத்திரியில் பாம்புகடிக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருந்து இல்லாததால் உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது என்று குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

உடுமலை உட்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த்கண்ணன் தலைமை தாங்கினார்.உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை எடுத்துக்கூறி பேசினார்கள்.

இதில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் வருமாறு:-

அணை மற்றும் குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. விரைந்து அனுமதி வழங்க வேண்டும். விவசாயத்துறையின் மூலமாக வழங்கப்படும் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர் உரங்கள் தரமானதாக இல்லை. விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற பிரதம மந்திரி ஊக்கத்தொகையும் அதிக நபர்களுக்கு கிடைக்காமல் உள்ளது. மடத்துக்குளம் தாலுகா தெற்கு கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் கோழிப்பண்ணை உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால் அதில் ஈக்கள் உற்பத்தி அதிகமாகி பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆவின் மூலமாக பால் கொள்முதல் அதிகப்படுத்தவில்லை. பாலுக்கு கட்டுப்படியான விலையும் அளிக்கவில்லை. தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு பாலை கொள்முதல் செய்து விற்பனையும் செய்கிறது. ஆவின் மூலமாக அதிகளவில் பால் கொள்முதல் செய்து விற்பனையும் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் கிராமப்புற பகுதிகளுக்கு முறையாக பஸ் போக்குவரத்து இல்லை. அதிகாரிகளுக்கு மனுஅளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

பி.ஏ.பி. கால்வாய்

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் தடங்கல்களை சந்தித்து வருகின்றனர். பி.ஏ.பி. கால்வாயில் பணிகள் நடைபெறுவது சம்பந்தமாக அறிவிப்பு பலகை வைக்கவில்லை. இதனால் என்ன பணி நடைபெறுகிறது எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்ற விவரம் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. கால்வாய் பராமரிப்பு பணிகளை பருவமழைக்கு முன்பு விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்கும் மருந்து இருப்பில் இல்லை.இதனால் பாதிக்கப்படும் நபரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுகின்றனர். காலநேரம் வீணாகி உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே பாம்புகடி சிகிச்சைக்கு உண்டான மருந்தை உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் இருப்பில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிமங்கலம் ஒன்றிக்கு உட்பட்ட பல பஸ் நிறுத்தங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் வாரச்சந்தை நாட்கள் மற்றும் காலை வேளையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விருகல்பட்டி, விருகல்பட்டிபுதூர், வி.வல்லக்குண்டாபுரம் பகுதிக்கு செல்லும் தார் சாலை சேலம் அடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.மேலும் பஸ் வசதியும் இல்லை. இதனால் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது.பள்ளி கல்லூரிக்கு குழந்தைகள் செல்வதற்கு ஏதுவாக காலை மற்றும் மாலை வேளையில் பஸ் விட வேண்டும்.

இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள்.

கலந்து கொண்டவர்கள்

இந்த கூட்டத்தில் தாசில்தார்கள் கண்ணாமணி (உடுமலை) செல்வி (மடத்துக்குளம்) ஆர்.டி.ஓ உதவியாளர் ஜலஜா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விவேகானந்தன் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Next Story