மகனை தொடர்ந்து தாயும் சாவு
மகனை தொடர்ந்து தாயும் உயிரிழந்தார்.
ஸ்ரீரங்கம்:
விஷம் குடித்தனர்
திருச்சி ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 70). இவருடைய மனைவி சிவகாமி(60). இவர்களுக்கு செந்தில், தினேஷ்(36) என 2 மகன்கள் இருந்தனர். இதில் செந்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
தினேஷ் மனநலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் விரக்தி அடைந்த மோகன் தனது மனைவி, மகனுடன் கடந்த 11-ந் தேதி இரவு தனது வீட்டில் விஷம் குடித்தார். மறுநாள் காலை அவர்கள் 3 பேரும் மயங்கி கிடந்தனர்.
தாயும் சாவு
இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு சென்று, 3 பேரையும் மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று காலை சிவகாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மோகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.