மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் பாய்ந்து தீப்பற்றியது
மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் பாய்ந்து தீப்பற்றி எரிந்தது.
எடப்பாடி:-
எடப்பாடி அருகே நள்ளிரவு நேரத்தில் மது போதையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சாகசம் செய்த போது, அந்த வண்டி பள்ளத்தில் பாய்ந்து தீப்பற்றி எரிந்தது. இதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
மோட்டார் சைக்கிள் சாகசம்
சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த மொரசபட்டி வெள்ளகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன். இவருடைய மகன் ஆறுமுகம் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தங்கியிருந்து கட்டிட பணிகளை செய்து வருகிறார். மது அருந்தும் பழக்கம் உள்ள ஆறுமுகம் அவ்வப்போது தனது மோட்டார் சைக்கிளை மின்னல் வேகத்தில் ஓட்டி சாகசம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மது போதையில் இருந்த ஆறுமுகம் திருச்செங்கோட்டில் இருந்து மொரசப்பட்டி பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்துள்ளார். எடப்பாடியை அடுத்த கள்ளுக்கடை பகுதியில் வந்த போது ஆறுமுகம் தனது மோட்டார் சைக்கிளை திரைப்படங்களில் வருவது போல், மின்னல் வேகத்தில் டயரில் புகை பறக்க வேகமாக ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தீப்பற்றி எரிந்தது
அப்போது எதிர்பாராத விதமாக ஆறுமுகம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் பாய்ந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அந்த வண்டி தீப்பற்றி எரிய தொடங்கியது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோல் முழுவதும் சிதறி தீப்பிடித்து எரிந்த நிலையில் வண்டியை ஓட்டி வந்த ஆறுமுகத்தின் மீதும் தீப்பற்றி எரிந்தது.
இதனிடையே அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பூலாம்பட்டி போலீசார் விபத்தில் சிக்கிய ஆறுமுகத்தை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த தீக்காயம் அடைந்த ஆறுமுகத்துக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நள்ளிரவு நேரத்தில் எடப்பாடி அருகே மோட்டார் ைசக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி தீ விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.