தேசிய கல்வி கொள்கை இருமொழி கொள்கையை பாதிக்கும்


தேசிய கல்வி கொள்கை இருமொழி கொள்கையை பாதிக்கும்
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:48 PM GMT)

தேசிய கல்வி கொள்கை இருமொழி கல்வியை பாதிக்கும் வகையில் உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கலை திருவிழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அதிகாரி முருகன் வரவேற்றார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில் கூறியதாவது:-

குமரி மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குகிறது. வகுப்பறையில் கற்பது மட்டும் போதுமானதாக இருக்கக் கூடாது, மாணவர்களின் திறமையையும் வெளிக்கொண்டு வர வேண்டும் என்பது முதல்-அமைச்சரின் எண்ணம். அவரது அறிவுறுத்தலின் பேரில் உருவானது தான் கலை திருவிழா திட்டமாகும். கடந்த ஆண்டு 27 லட்சம் மாணவர்கள் கலை திருவிழாவில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கலை திருவிழாவானது மாணவருடைய தன்னம்பிக்கையையும், உளவியல் ரீதியாக மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. கலை திருவிழா மூலமாக மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்ததை பார்த்து பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தயவு செய்து பெற்றோர் தங்களது குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது.

தமிழகத்தில் 30 மாத காலத்தில் 51 திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். மாணவர்கள் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். முதல்-அமைச்சர் அறிவித்துள்ள திட்டத்தை வெற்றிகரமான திட்டமாக மாற்றி காட்டுகின்ற ஒவ்வொருவராக மாணவர்கள் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், கல்வி விகிதாசாரத்தில் தமிழகம் 75 சதவீதத்தை எட்டி உள்ளது. குமரி மாவட்டமும் கலையில் பெயர் பெற்ற மாவட்டமாகும். சிலம்பம், அடிமுறை என பல கலைகள் உள்ளன. வர்மக்கலை குமரி மாவட்டத்தில் மட்டுமே உள்ளது" என்றார். முடிவில் நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் மோகன் நன்றி கூறினார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், தி.மு.க. மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகி தில்லை செல்வம், மாநகர செயலாளர் ஆனந்த், மாணவரணி அமைப்பாளர் அருண் காந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவை செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜாண் ஜெகத் பிரைட் ஒருங்கிணைத்து வழங்கினார்.

முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய கல்வி கொள்கையானது இருமொழிக் கொள்கையை பாதிக்கும் வகையில் உள்ளது. தாய் மொழியையே கற்றுக்கொள்ள முடியாத சூழலில் குலக்கல்வி திட்டத்தை மறைமுகமாக கொண்டு வரப்பார்க்கிறார்கள். எனவே தான் மாநில கல்வி கொள்கை கொண்டு வரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் கல்வியாளர்கள் குழு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து மாநில கல்வி கொள்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தியா முழுவதும் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதாக கேட்கிறீர்கள். தேசிய அளவில் ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டு அந்த கமிட்டியில் இருந்து பாட திட்டம் தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. அதை என்.சி.இ.ஆர்.டி. ஏற்றுக் கொண்டதா? என்று தெரியவில்லை. ஆனால் எதுவாக இருந்தாலும் மாநில கல்வி கொள்கை இருப்பதால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story