கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும்


கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும்
x
தினத்தந்தி 4 Oct 2023 8:00 PM GMT (Updated: 4 Oct 2023 8:00 PM GMT)

கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.

கோயம்புத்தூர்


கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.


கோவைக்கு முக்கியத்துவம்


கோவையில் வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு லட்சம் வங்கி கணக்குகளில் ரூ.3,749 கோடி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. முத்ரா, ஸ்டார்ட் அப் இந்தியா உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் இந்த கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.


இதன்மூலம் கோவைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் வழங்கி வருவதை அறிந்து கொள்ளலாம். கோவையின் வேகமான வளர்ச்சிக்கு இந்த கடனுதவி திட்டம் உறுதுணையாக இருக்கும். தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் இந்த மாபெரும் கடனுதவி திட்ட முகாம் நடத்தப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியின் போது தனக்கு வங்கி கடன் கிடைக்கவில்லை என்று ஒருவர் கூறினார். அவரது கோரிக்கையும் கூட்டத்தில் கேட்கப்பட்டது.


தொகுதி பிரச்சினைகள்


அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி ஆகியோர் தங்களது தொகுதி பிரச்சினைகளுக்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். அரசு நிகழ்ச்சி என்பதால் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. கோவையில் ஒரு வங்கி திறப்பு விழா பெயர்பலகையில் தமிழ்மொழி இல்லாதது குறித்து மத்திய மந்திரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்துள்ளார். எங்கு வங்கி கிளை திறந்தாலும் அங்கு உள்ளூர் மொழியில் பெயர்பலகை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.


கோவையில் அரசியல் தொடர்பான நிகழ்வுகள் எதுவும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான நிகழ்வுகள் அனைத்தும் தேசிய தலைமை தான் முடிவு செய்யும். சென்னையில் பா.ஜனதா கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றதா என்பது குறித்து எனக்கு முழு விவரம் தெரியவில்லை. மாநில தலைவர் இன்றி கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தலாம். இவ்வாறு அவர் பேட்டியின் போது கூறினார்.



Next Story