புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு 4 நாட்களில் குணமாகிவிடும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு 4 நாட்களில் குணமாகிவிடும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 31 Dec 2023 2:30 AM IST (Updated: 31 Dec 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

புதிய வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை, தரமணி 100 அடி சாலையில் நேற்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்வில், அசன் மவுலானா எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 43 ஆயிரத்து 432 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில், 21 லட்சத்து 79 ஆயிரத்து 991 பொதுமக்கள் பயன்பெற்றுள்ளனர். மேலும், கொரோனா பாதிப்பு ஆரம்பத்தில் இருந்து தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது ஜெ.என்.1. என்கின்ற புதிய வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. குறிப்பாக, தெற்காசிய நாடுகளில் மிகப்பெரிய அளவில் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த ஜெ.என்.1. வைரஸ் பாதிப்புகளுக்கு ஆஸ்பத்திரி சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளும் தேவை ஏற்படாத வகையில் மிதமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த புதிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் 3 முதல் 4 நாட்களில் குணமாகிவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் புதிய வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு குழுவான பாதிப்புகள் பதிவாகவில்லை.

பொது சுகாதாரத்துறை சார்பில், இணை நோய், நுரையீரல் பாதிப்பு, இதய நோய் பாதிப்பு, நாள்பட்ட நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய வகை வைரஸ் தீவிர பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவில்லை. எனவே, பொதுமக்கள் பெரிய அளவில் அச்சம்கொள்ளத் தேவையில்லை. தமிழ்நாட்டில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து மருத்துவ கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பை பொறுத்தவரை இந்த ஆண்டு இதுவரை 8 ஆயிரத்து 953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த காலங்களை விட குறைவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story