புதிய கதவணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 26-ந் தேதி திறந்து வைக்கிறார்-அமைச்சர் கே.என்.நேரு தகவல்


புதிய கதவணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்     26-ந் தேதி திறந்து வைக்கிறார்-அமைச்சர் கே.என்.நேரு தகவல்
x

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய கதவணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி திறந்து வைக்கிறார் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

திருச்சி

திருச்சி, ஜூன்.18-

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய கதவணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி திறந்து வைக்கிறார் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

முக்கொம்பு கதவணை

திருச்சி மாவட்டம் முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள அணையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 9 மதகுகள் உடைந்தன. இதையடுத்து அந்த பகுதியில் புதிய அணை கட்ட ரூ.387 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் கட்டுமான பணிகள் தொடங்கின.

இந்த பணிகளை 2021-ம் ஆண்டு மே மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாகவும், காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்ததாலும் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அதன்பிறகு கட்டுமான பணிகள் துரிதமாக தொடர்ந்து நடைபெற்று வந்தன. புதிய கதவணை பணிகளுடன் சேர்த்து அங்கு வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் புதிய பால பணிகளும் நடைபெற்றது.

முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்

இந்த பணிகள் அனைத்தும் தற்போது 95 சதவீதம் முடிவடைந்துவிட்டன. இந்தநிலையில் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை மற்றும் புதிய பால பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட கதவணையை வருகிற 26-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வந்து காலை 11 மணிக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார். இங்கு தற்போது 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. முதல்-அமைச்சர் வருவதற்குள் மீதமுள்ள 5 சதவீத பணிகளும் முடிவடைந்துவிடும். இந்த புதிய பாலம் பழைய பாலம் போலவே குறுகலான பாலமாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

ரூ.130 கோடியில் காவிரி பாலம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மாயனூர் பாலத்தை கட்டியபோது, இருவழிப்பாதையாக இருக்கும் வகையில் கட்டினார். ஆனால் இந்த பாலம் குறுகலான பாலமாக ஒருவழிப்பாதையாக தான் உள்ளது. அதேநேரம் இங்கு வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். அதை முதல்-அமைச்சர் தான் தெரிவிப்பார். திருச்சி மாவட்டத்தில் ரூ.18½ கோடியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கி முடிவடைந்துவிட்டது.

திருச்சியில் காவிரி ஆற்றில் புதிய பாலம் கட்டுவதற்கு ஏற்கனவே ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது ரூ.130 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி நகரில் புதிய காவிரி பாலம், உயர்மட்ட சாலை ஆகியவற்றுக்கான பரிசோதனை பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்குள் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story