பா.ம.க.வின் புதிய தலைவராகிறார், டாக்டர் அன்புமணி ராமதாஸ்


பா.ம.க.வின் புதிய தலைவராகிறார், டாக்டர் அன்புமணி ராமதாஸ்
x

நாளை நடைபெறும் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்படுகிறார்.

சென்னை,

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத வாக்குவங்கியை வைத்துள்ள பா.ம.க., 1989-ம் ஆண்டு உதயமானது. வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கத்தை, பா.ம.க. என்ற அரசியல் கட்சியாக டாக்டர் ராமதாஸ் தொடங்கினார்.

பா.ம.க.வை பொறுத்தவரையில் அக்கட்சியின் நட்சத்திர முகமாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறியப்படுகிறார். சமீபகாலங்களில் அன்புமணி ராமதாசின் 'ஹைடெக்' தேர்தல் பிரசாரம், புள்ளிவிவர பேச்சுகள், கட்சியில் அவரது செயல்பாடுகள் இவை அனைத்துமே அவரை அரசியல் அரங்கில் வெகுவாக பேசவைத்திருக்கிறது.

108 ஆம்புலன்ஸ் திட்டம்

2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க போட்டியிட்ட 6 இடங்களிலும் வென்றது. இதில் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு சுகாதாரத்துறை மந்திரியாக பதவியேற்றுக்கொண்டனர்.

மந்திரியாக பதவி வகித்த காலத்தில் இந்தியாவில் முதன்முறையாக 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பொது இடங்களில் புகைபிடிக்க தடைச்சட்டம் இயற்றியது, புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை படம் அச்சடித்தது, தேசிய மருந்துகள் ஆணையம் அமைக்கப்பட்டது இவரது துறையின் சாதனை ஆகும்.

2014-ம் ஆண்டு தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்வானார். தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக பணியாற்றி வருகிறார்.

கட்சியினர் வலியுறுத்தல்

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து களம்கண்டபோதும் பா.ம.க.வுக்கு வெற்றிவாய்ப்பு கிட்டவில்லை. இந்தநிலையில், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு வியூகங்களை டாக்டர் ராமதாஸ் மற்றும் மூத்த நிர்வாகிகள் வகுத்து வருகிறார்கள். ஏற்கனவே டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 10 மாவட்டங்களில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.

பா.ம.க.வின் முக்கிய அடையாளமாக வலம் வரும் அன்புமணி ராமதாஸ், தலைவர் பதவி ஏற்று செயல்பட வேண்டும் என்று அக்கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

சிறப்பு பொதுக்குழு கூட்டம்

இந்த சூழலில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம், சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள ஜி.பி.என். மாளிகையில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இக்கூட்டத்தில் பா.ம.க.வின் புதிய தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள்-தொண்டர்களை சந்திக்க இருக்கிறார்.


Next Story