காவலில் எடுத்த 5 பேரை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 5 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை
கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 5 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் வெடிப்பு
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து கோவை கார் வெடிப்பு வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. பின்னர் கோவை மட்டுமின்றி திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக கோவையில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில், ஒரு சில இடங்களில் செல்போன், பென் டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
மேலும் 3 பேர் சிக்கினர்
இதற்கிடையே கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக உமர் பரூக், பெரோஸ் கான், முகமது தவ்பிக் ஆகிய 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அதன்படி கைதான 9 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதுதொடர்பான வழக்கு, சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் முகமது அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், உமர் பரூக், பெரோஸ்கான், அப்சர்கான் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவர்களை 9 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
தொடர்ந்து அசாருதீன் உள்பட 5 பேரையும் கடந்த 21-ந் தேதி முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் 4 நாட்கள் சென்னையில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் 5 பேரையும் நேற்று முன்தினம் இரவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை அழைத்து வந்தனர்.
தீவிர விசாரணை
இதைத்தொடர்ந்து அவர்களை நேற்று அதிகாலை 5 மணி முதல் உக்கடம், புல்லுக்காடு, ஜி.எம்.நகர், அல் அமீன் காலனி, பிலால் எஸ்டேட் உள்ளிட்ட இடங்களுக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு கார் வெடிப்பு சம்வம் நடைபெறும் முன்பு எங்கெல்லாம் சந்தித்து பேசினர், அவர்கள் சந்தித்து பேசிய கடைகள், கூட்டம் நடத்திய பகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் அவர்களிடம் எந்தெந்த நேரத்தில் அனைவரும் சந்தித்து பேசினீர்கள், எங்கிருந்து வெடி பொருட்கள் வாங்கினீர்கள், வேறு எங்காவது அசாம்பாவிதங்கள் நிகழ்த்த திட்டமிட்டீர்களா?, இந்த சதி திட்டத்திற்கு வேறு யாரும் உதவி செய்தார்களா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை காரணமாக அந்த இடங்களில் பெரும் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து அவர்களிடம் 2-வது நாளாக இன்று(திங்கட்கிழமை) என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணை முடிந்து வருகிற 29-ந் தேதி அந்த 5 பேரும் பூந்தமல்லி என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.