'மார்பிங்' செய்த ஆபாச வீடியோவை அனுப்பி பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் பணம் பறித்த வடமாநில கும்பல்


மார்பிங் செய்த ஆபாச வீடியோவை அனுப்பி பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் பணம் பறித்த வடமாநில கும்பல்
x
தினத்தந்தி 13 July 2023 2:30 AM IST (Updated: 13 July 2023 5:57 PM IST)
t-max-icont-min-icon

'மார்பிங்' செய்த ஆபாச வீடியோவை அனுப்பி பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் பணம் பறித்த வடமாநில கும்பலை பிடிக்க ராஜஸ்தான் மாநிலத்துக்கு சைபர் கிரைம் தனிப்படையினர் விரைந்தனர்.

தேனி

'மார்பிங்' செய்த ஆபாச வீடியோவை அனுப்பி பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் பணம் பறித்த வடமாநில கும்பலை பிடிக்க ராஜஸ்தான் மாநிலத்துக்கு சைபர் கிரைம் தனிப்படையினர் விரைந்தனர்.

எம்.எல்.ஏ.வுக்கு ஆபாச வீடியோ

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த 48 வயது என்ஜினீயரின் 'வாட்ஸ்-அப்' எண்ணுக்கு மார்பிங் செய்த ஆபாச வீடியோவை அனுப்பி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் என்ஜினீயர் என்று கூறப்பட்ட அந்த நபர் பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "சரவணக்குமார் எம்.எல்.ஏ.வின் 'வாட்ஸ்-அப்' எண்ணுக்கு கடந்த 1-ந்தேதி ஒரு வீடியோ கால் வந்தது. பதிவு செய்யாத புதிய எண் என்ற போதிலும் அந்த அழைப்பை அவர் ஏற்றார். அப்போது எதிரே யாரும் முகம் காட்டவில்லை. வீடியோ காலில் எதிர்முனையில் யாரும் இல்லாததால் அந்த அழைப்பை அவர் துண்டித்து விட்டார். இந்தநிலையில், அவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு வீடியோ வந்தது. அதில் எம்.எல்.ஏ. வீடியோ காலில் ஒரு பெண்ணுடன் பேசுவது போன்றும், எதிர்முனையில் நிர்வாணமாக பெண் இருப்பது போன்றும் 'மார்பிங்' செய்து அந்த வீடியோவை அனுப்பியுள்ளனர்.

பணம் கேட்டு மிரட்டல்

வீடியோ அனுப்பிய நபர்கள் எம்.எல்.ஏ.விடம் பணம் கேட்டு மிரட்டினர். எதிர்முனையில் மிரட்டிய நபர்களுக்கு 3-ந்தேதி ரூ.5 ஆயிரம், 8-ந்தேதி ரூ.5 ஆயிரம் என ரூ.10 ஆயிரம் அனுப்பிய நிலையில், மீண்டும் பணம் கேட்டு மிரட்டினர். அதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர் எம்.எல்.ஏ. என்பதால் அதுகுறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு மிரட்டிய நபர்கள் பயன்படுத்திய செல்போன் எண், பணம் பெற பயன்படுத்திய கூகுள்பே எண் மற்றும் வங்கிக்கணக்கு விவரங்களை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ராஜஸ்தான் விரைவு

தனிப்படையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், எம்.எல்.ஏ.விடம் பணம் பறிக்க முயன்ற கும்பல் பயன்படுத்திய ஒரு செல்போன் எண் மேகாலயா மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் பெயரில் இருப்பதும், பணம் பெற பயன்படுத்திய வங்கிக்கணக்கு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மற்றொருவரின் பெயரில் இருப்பதும் தெரியவந்தது. பணம் பறித்த கும்பல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து செயல்பட்டதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த கும்பலை பிடிக்க ராஜஸ்தான் மாநிலத்துக்கு தனிப்படையினர் விரைந்தனர். அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பிடிபட்டால் தான், இதுபோன்று வேறு யாரை எல்லாம் மிரட்டி பணம் பறித்தார்கள்? என்ற விவரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story