ஓடும் பஸ்சில் நர்சுக்கு தொல்லை
நெல்லையில் இருந்து கோவைக்கு வந்தபோது ஓடும் பஸ்சில் நர்சுக்கு தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கோவை
நெல்லையில் இருந்து கோவைக்கு வந்தபோது ஓடும் பஸ்சில் நர்சுக்கு தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
இளம்பெண்
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தலைமை நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று இருந்தார். பின்னர் விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் இரவு கோவைக்கு புறப்பட்டார். அவர் நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு வரும் தனியார் சொகுசு பஸ்சில் நெல்லையில் இருந்து ஏறி பயணித்தார்.
புகைப்பிடித்தார்
அப்போது நர்சு அமர்ந்து இருந்த இருக்கைக்கு பின் இருக்கையில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார். அந்த வாலிபர் புகைப்பிடித்ததாக தெரிகிறது. இது முன் இருக்கையில் அமர்ந்து இருந்த நர்சுக்கு தொல்லையாக இருந்தது. உடனே அவர் பஸ் டிரைவரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த வாலிபரை டிரைவர் கண்டித்தார். இதனால் நர்சு மீது அந்த வாலிபர் ஆத்திரத்தில் இருந்தார்.
கையை பிடித்து...
இதையடுத்து காந்திபுரத்துக்கு வந்ததும், பஸ்சில் இருந்து நர்சு கீழே இறங்க முயன்றார். அப்போது நர்சின் கையை பிடித்து அந்த வாலிபர் இழுத்ததாக தெரிகிறது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நர்சு கூச்சலிட்டார். உடனே சக பயணிகளின் உதவியுடன் அருகில் உள்ள காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று நர்சின் கையை பிடித்து இழுத்து தொல்லை கொடுத்த வாலிபரை பிடித்தனர்.
கைது
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த முருகன்(வயது 36) என்பதும், கோவையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.