ரூ.2 லட்சம் லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்த அதிகாரி


ரூ.2 லட்சம் லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்த அதிகாரி
x
தினத்தந்தி 27 Aug 2023 6:45 PM GMT (Updated: 27 Aug 2023 6:46 PM GMT)

ரூ.2 லட்சம் லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பசுமை வீடு திட்ட பயனாளிகள் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் நீலமங்கலம் ஊராட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு 28 பயனாளிகளுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் ஆணை வழங்கப்பட்டது. இதில் 23 வீடுகள் அப்போது கட்டி முடிக்கப்பட்டது.

இந்த நிலையில் சரியான பயனாளிகள் தேர்வு செய்யப்படவில்லை என கூறி அப்போதைய ஊராட்சி மன்ற தலைவர் நீதிமன்றத்தில்் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீடு கட்டிய பயனாளிகளுக்கு அதற்குரிய பணம் வழங்காமல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நிறுத்தி வைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீடு கட்டிய பயனாளிகள் தங்களுக்கு உரிய பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அவர், 23 பயனாளிகளுக்கு வீடு கட்டியதற்கான பில் போட்டு பணம் வழங்க ரூ. 2 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பயனாளிகள் அனைவரும் சேர்ந்து அந்த அதிகாரியிடம் ரூ. 2 லட்சம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணம் வாங்கிக்கொண்டு அவர், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பயனாளிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பணத்தை திருப்பி கொடுத்த அதிகாரி

இந்த நிலையில் அந்த அதிகாரி வருகிற 31-தேதி பணி ஓய்வு பெற இருப்பதால் பயனாளிகளுக்கு பில் தயார் செய்து கொடுக்காவிட்டால் நமக்கு ஏதாவது சிக்கல் வந்துவிடும் என கருதினார். இதையடுத்து அவர், தான் வாங்கிய ரூ.2 லட்சம் பணத்தை சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பயனாளிகள் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கி விட்டு பின்னர் அதனை திருப்பி கொடுத்த சம்பவம் குறித்து கலெக்டர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் பயனாளிகளுக்கு உரிய பணத்தை வழங்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story