கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு


கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு
x

கிணற்றில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் திருமூர்த்தி(வயது 74). இவர் சொந்தமாக விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் திருமூர்த்தி நேற்று முன்தினம் மாலை தனது வயலுக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். பின்னர் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதை அறிந்த உறவினர்கள் திருமூர்த்தியை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. நேற்று காலை காணாமல்போன திருமூர்த்தி வயல் அருகே குமரசாமி என்பவரது வயலில் உள்ள கிணற்றின் மேல் பகுதியில் திருமூர்த்தியின் செருப்பு மற்றும் துண்டு, சட்டை கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கூறியுள்ளனர். இதை அறிந்த உறவினர்கள் உடனடியாக வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி தேடி பார்த்த போது திருமூர்த்தி இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் பிச்சுமணி விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போலீசார் விசாரணையில் திருமூர்த்தி வயலுக்கு வரும்போது தனியாருக்கு சொந்தமான கிணற்றில் இறங்கி பாட்டிலில் தண்ணீர் எடுப்பாராம். அதேபோல் தான் பாட்டிலில் தண்ணீர் எடுக்க சென்றபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்பது தெரிய வந்தது.


Next Story