போக்குவரத்து விதிமீறலுக்கு அதிக அபராதம் விதிக்கும் அரசாணை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது - ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்


போக்குவரத்து விதிமீறலுக்கு அதிக அபராதம் விதிக்கும் அரசாணை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது - ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
x

போக்குவரத்து விதிமீறலுக்கு அதிக அபராதம் விதிக்கும் அரசாணை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தது. இந்த திருத்தங்களின் அடிப்படையில் தமிழக அரசு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை உயர்த்தி கடந்த 2021-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இருந்தபோதும் விதிமீறல்கள் தொடர்வதால் அரசாணையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், அபராதத்தை உயர்த்தியதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவுவதால் வாகன தணிக்கையில் ஈடுபடுவதற்கு போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாகவும் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விதியை மீறி வாகனங்களை இயக்குவது தொடர்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய சாலையில் செல்லக்கூடிய இருசக்கர வாகனங்கள், ஷேர் ஆட்டோ போன்ற வாகனங்கள் முதல் நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய கனரக வாகனங்கள் வரை போக்குவரத்து விதிகளை மீறுவதால் உயிரிழப்புகளும் காயங்களும் உடல் பாகங்களை இழக்கும் சூழ்நிலையும் தொடர்கதையாக இருக்கிறது என்று அந்த மனுவில் அவர் வேதனை தெரிவித்திருக்கிறார்.

இதனால் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு பணியாற்ற உத்தரவிட வேண்டும் என்று அரசுக்கு கடிதம் அனுப்பியும் அதை பரிசீலிக்கவில்லை என்றும் அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், போக்குவரத்து விதிமீறலுக்கு அதிக அபராதம் விதிக்கும் அரசாணை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து போக்குவரத்து விதிமீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கடந்த வாரம் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டு எந்த சம்பவத்தையும் மனுதாரர் இந்த மனுவில் தெரிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், போக்குவரத்து விதிமீறலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்துவது அரசின் கடமை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story