தடுப்பணையை மூழ்கடித்தபடி பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்
நெல்லிக்குப்பம் தென்பெண்ணையாற்றில் தடுப்பணையை மூழ்கடித்தபடி பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் இளைஞர்கள் ஆபத்தான குளியலை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்
அணைகளில் நீர் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணை நிரம்பியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையில் இருந்து உபரிநீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டது. இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழையால் தென்பெண்ணையாறு, மலட்டாறு ஆகிய ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் தென்பெண்ணையாற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தடுப்பணைக்கு
இந்த தண்ணீர் நேற்று முன்தினம் மாலை கடலூர் மாவட்ட எல்லை பகுதிக்கு வந்தது. பின்னர் நேற்று மதியம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள விஸ்வநாதபுரம் தடுப்பணைக்கு தண்ணீர் வந்தது. சிறிது நேரத்தில் தடுப்பணை நிரம்பி வழிந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் தடுப்பணை நிரம்பி வழிவதை அறிந்து அந்த பகுதி மக்கள் வேடிக்கை பார்க்க அங்கே திரண்டு வந்தனர். மேலும் ஆர்வமிகுதியால் சில இளைஞர்கள் அங்கு ஓடும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் உள்ளே இறங்கியும், டைவ் அடித்தும் குளித்து வருகின்றனர். ஆகவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தடுப்பணை பகுதியில் தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.