ரேஷன் அரிசி பதுக்கிய மீன்குட்டை உரிமையாளர் கைது
விருத்தாசலம் அருகே ரேஷன் அரிசி பதுக்கிய மீன்குட்டை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு கீதா மேற்பார்வையில் விழுப்புரம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் வழிகாட்டுதலின்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஏழுமலை ஆகியோர் தலைமையிலான போலீசார் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரவலூர் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவரது வீட்டின் அருகில் ஒருவர் சாக்கு மூட்டைகள் அடுக்கி கொண்டிருந்தார்.
இதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார், அந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மூட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில் அவர் விருத்தாசலம் அடுத்த படுகளாநத்தத்தை சேர்ந்த குமரேசன் (வயது 40) என்பதும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை தனது மீன் குட்டைகளில் போடுவதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 21 மூட்டைகளில் இருந்த 1,050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், மீன் குட்டை உரிமையாளரான குமரேசனை கைது செய்தனர்.