நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது


அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

புதுக்கோட்டை

பங்குனி திருவிழா

அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா காப்புக்கட்டுதலுடன் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கொடிமரத்தில் கொடியேற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து காப்பு கட்டப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து, தினமும் மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் தேரோடும் வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவையொட்டி மண்டகப்படி தாரர்களின் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும்.

தேரோட்டம்

வருகிற 9-ந்தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர். அன்று தீச்சட்டி ஊர்வலம், முளைப்பாரி ஊர்வலம், தொட்டில் கட்டுதல், மாவிளக்கு ஏற்றுதல், அலகு குத்துதல், காவடி ஆட்டம், பறவைக்காவடி, பொங்கல் வழிபாடு என ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து முக்கிய வீதிகள் வழியாக செல்லும். விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் சார்பில் நீர்மோர், அன்னதானம் வழங்கப்படும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

உள்ளூர் விடுமுறை

திருவிழாவையொட்டி அரசு போக்குவரத்துகழகம் சார்பில் புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசல் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 10-ந்தேதி நடைபெறும் தேர் திருவிழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story
  • chat