விழுப்புரத்தில் நடுரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி சீரமைக்கும் பணி தீவிரம்


விழுப்புரத்தில்    நடுரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி    சீரமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் நடுரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பள்ளத்தை சீரமைக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்றது.

விழுப்புரம்


திடீர் பள்ளம்

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இச்சாலை, எந்நேரமும் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டம் மிகுந்தும் காணப்படும். இந்நிலையில் அங்குள்ள மகாராஜபுரம் பகுதியில் நேற்று காலை திடீரென சாலையில் 6 அடி பள்ளம் ஏற்பட்டது. இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக சாலையில் ஏற்பட்ட பள்ளத்தினுள் பொதுமக்கள், மரக்கிளையை நட்டும், அந்த பள்ளத்தை சுற்றிலும் செங்கல் வைத்தும் தற்காலிகமாக தடுப்புகளை அமைத்தனர். சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை உடனடியாக பொதுமக்கள் பார்த்து தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

பின்னர் நகராட்சி அதிகாரிகள், போலீசார் அங்கு விரைந்து சென்று பேரிகார்டுகள் மூலம் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். ஏற்கனவே அப்பகுதியில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்த நிலையில் மண் உள்வாங்கி ராட்சத பள்ளம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி 2 பொக்லைன் எந்திரங்கள் அங்கு வரவழைக்கப்பட்டு சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடத்தை சுற்றிலும் 10 அடிக்கும் மேல் பள்ளம் தோண்டப்பட்டு வலுவான கட்டமைப்புடன் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை பார்வையிட்ட நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்காத வகையில் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.


Next Story