சுடுகாட்டில் கொடும்பாவியை எரித்து சேவலை பலி கொடுத்த மக்கள்
ஸ்ரீமுஷ்ணம் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 6 மாதங்களில் 6 பேர் அடு்த்தடுத்து உயிரிழந்தனர். இதில் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சுடுகாட்டில் கொடும்பாவியை எரித்து சேவலை பலி கொடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 6 மாதங்களில் 6 பேர் அடு்த்தடுத்து உயிரிழந்தனர். இதில் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சுடுகாட்டில் கொடும்பாவியை எரித்து சேவலை பலி கொடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
6 மாதங்களில் 6 பேர் பலி
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் கிராமத்தில் ஆணையன் காலனி உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களில் மட்டும் அடுத்தடுத்து 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தங்கள் பகுதி குடிநீரின் தன்மை, நோய் பரப்பும் கிருமிகள், காற்று மாசுபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து, மக்கள் சுகாதாரமாக வாழ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 6 மாதங்களில் 6 பேர் உயிரிழந்ததால் சாமி குற்றம் என கருதி தினமும் அச்சத்தில் இருந்து வந்தனர்.
சேவலை பலி கொடுத்தனர்
இந்த நிலையில் ஆணையன் காலனி பகுதி மக்கள் தங்களது அச்சத்தை போக்கிடும் வீடுதோறும் தலா ரூ.200 வீதம் வசூல் செய்து, சுடுகாட்டில் கொடும்பாவியை எரித்து சேவலை பலி கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி அப்பகுதி மக்கள் கொடும்பாவியை தயார் செய்து, அதற்கு தீயிட்டு ஒருவர் மூலம் சுடுகாட்டுக்கு இழுத்துச் சென்று வீசியதுடன், அங்கு சேவலை பலி கொடுத்து விட்டு, அங்கிருந்து திரும்பி பார்க்காமல் வரும் வினோத நிகழ்ச்சி நடந்தது. இந்த அப்பாவி மக்களின் பீதியை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த சம்பவத்தால் ஸ்ரீமுஷ்ணம் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த வினோத நிகழ்ச்சியை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைராகி வருகிறது.