நாகர்கோவிலில் தாய்க்கு பேய் ஓட்டுவதாக கூறி8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய மந்திரவாதி கைது


நாகர்கோவிலில் தாய்க்கு பேய் ஓட்டுவதாக கூறி8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய மந்திரவாதி கைது
x

நாகர்கோவிலில் தாய்க்கு பேய் ஓட்டுவதாக கூறி 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

நாகர்கோவிலில் தாய்க்கு பேய் ஓட்டுவதாக கூறி 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.

மாந்திரீக பூஜை

நாகர்கோவில் வடசேரி மேலக்கலுங்கடியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் மாந்திரீகம் மற்றும் பரிகார பூஜைகள் செய்து வருகிறார். இவருக்கும், வடசேரி பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் தொழிலாளியின் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மனைவிக்கு பரிகார பூஜை செய்வதற்காக மணிகண்டனை தொழிலாளி தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.

அப்போது தொழிலாளியின் மனைவிக்கு பேய் பிடித்ததாகவும், அதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் மணிகண்டன் கூறியுள்ளார். இதன் காரணமாக மணிகண்டன் அடிக்கடி தொழிலாளியின் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது தொழிலாளியின் மூத்த மகளான 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி மணிகண்டனுடன் பழக தொடங்கினாள். மணிகண்டனை மாமா என்று முறை சொல்லி அழைத்ததுடன் அவருடன் அன்பாக பழகி வந்தாள்.

பாலியல் பலாத்காரம்

இதை பயன்படுத்தி தொழிலாளியின் வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமியை மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். உன் அம்மாவுக்கு குணமாக வேண்டும் என்றால், நான் சொல்வதை கேள் என்று ஏமாற்றி இந்த பாதக செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். அதோடு நடந்ததை வெளியே கூறக்கூடாது என்றும் சிறுமியை மிரட்டி இருக்கிறார். இதனால் அச்சம் அடைந்த சிறுமி எதையும் வெளியே சொல்லவில்லை.

இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டது. அதை பெற்றோரிடம் கூறி சிறுமி அழுதாள். உடனே பெற்றோர் அந்த சிறுமியை அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

மந்திரவாதி கைது

இதை சிறுமியின் பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நடந்த விஷயத்தை சிறுமியிடம் கேட்டனர். அப்போது நண்பர் போல குடும்பத்தாருடன் பழகி வந்த மந்திரவாதி மணிகண்டன் தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதை பெற்றோரிடம் சிறுமி கூறினாள். அதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஓராண்டாக நடந்த கொடுமை

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மாணவி படிப்பில் மிகவும் ஆர்வமுடையவள். தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுத்து வந்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக மணிகண்டனுடன் ஏற்பட்ட பழக்கம் அவரை இந்த துயரத்துக்கு ஆளாக்கியுள்ளது. மாணவிக்கு பிடித்தமான திண்பண்டங்களை வாங்கி கொடுத்து இந்த நாசவேலையில் மந்திரவாதி ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாகவே மாணவியிடம் மணிகண்டன் அத்துமீறலில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

---


Next Story