செல்போன் திருடியவர் அடித்துக் கொலை


செல்போன் திருடியவர் அடித்துக் கொலை
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே செல்போன் திருடியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

விருத்தாசலம்

படுகாயங்களுடன் பிணம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் குப்பநத்தம் டாஸ்மாக் கடை அருகில் உள்ள விளைநிலங்களுக்கு செல்லும் பாதையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று உடலில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அடித்துக் கொலை

விசாரணையில் அவர் விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் அறிவு என்ற அறிவழகன் (வயது 45) என்பதும், அவரை மர்மநபர்கள் யாரோ அடித்துக் கொன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்போன் திருட்டு?

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் முதற்கட்ட விசாரணையில், அறிவழகனை டாஸ்மாக் கடை அருகே மது குடித்துக் கொண்டிருந்த ஒருவரது செல்போனை திருடி விட்டதாக கூறி, மர்மகும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், அறிவழகனை தாக்கி கொலை செய்த மர்மநபர்கள் யார்?, செல்போன் திருடியதால் தான் அவர் கொலை செய்யப்பட்டாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story