பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண வேண்டும்


பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண வேண்டும்
x

குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண வேண்டும் என்றும், தீர்வு காணாத அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

மக்கள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு முதியோர் உதவித்தொகை, இலவச வீடு, வீட்டுமனை பட்டா, கடனுதவி உள்ளிட்டவை தொடர்பாக மனுக்கள் அளித்தனர். மொத்தம் 314 மனுக்கள் பெறப்பட்டன.

அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அடிப்படை வசதிகள்

கூட்டத்தில் நாட்டறம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் அளித்துள்ள மனுவில், நாட்டறம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு பாதுகாவலர், தூய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும். கழிவறைக்கு போதுமான தண்ணீர் வசதி இல்லை. இதனால் மாணவிகள் அவதிப்படுகின்றனர். எனவே தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

ஆம்பூர் இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறோம். இங்கு செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் செல்போன் டவர் அமைப்பதால் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியிருந்தனர்.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

கூட்டத்தில் திருப்பத்தூர் தாலுகா குரும்பேரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்லும் வழியை 2 பேர் ஆக்கிரமித்து கடைகள் அமைத்து உள்ளனர். இதனால் எங்களால் இறந்தவர்கள் உடலை கொண்டு செல்ல முடியவில்லை. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி அங்கு வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என கூறியிருந்தனர்.

வாணியம்பாடி அருகே அலசந்தாபுரத்தை சேர்ந்த லோகேஸ்வரி என்பவர் அளித்துள்ள மனுவில், எனக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் எனது கணவர் கடந்த 4 வருடமாக என்னை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது கணவருடன் என்னை சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசுகையில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு அதிகாரிகள் சரிவர நடவடிக்கை எடுப்பது கிடையாது. இதனால் நாளுக்கு நாள் தேங்கும் மனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மனுக்களுக்கு தீர்வு காண்பது கிடையாது. நலத்திட்ட உதவிகளை வழங்க முயற்சி செய்வதும் கிடையாது. அப்படி இருக்கும்போது நீங்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு வருவதற்கு அர்த்தமே இல்லை. பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். அப்படி செயல்படாத அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என எச்சரித்தார்.

மயங்கி விழுந்த பெண்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு கவுதமி என்பவர் ஆம்பூரில் செல்போன் டவர் அமைக்கக்கூடாது என மனு அளிக்க வந்தார். அவர் மனு அளித்துவிட்டு செல்லும்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவருடன் வந்தவர்கள் தண்ணீரை தெளித்தனர். அதைத்தொடர்ந்து அவர் இயல்புநிலைக்கு வந்ததையடுத்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் பெலிக்ஸ்ராஜா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்தையன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாலசுப்பிரமணியன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story