பள்ளங்களை மூடி சீரமைக்க வேண்டும்
ராணிப்பேட்டையில் குடிநீர் பைப்லைன் புதைக்க தோண்டப்படும் பள்ளங்களை மூடி சீரமைக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நகராட்சி கூட்டம்
ராணிப்பேட்டை நகராட்சி கூட்டம், நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சீ.ம.ரமேஷ்கர்ணா, ஆணையாளர் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை கூறி அதனை சரிசெய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
அப்போது பாலாற்றங்கரையை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். மதுக்கடையில் மதுவாங்கும் பலர் அங்குள்ள காரிய மேடையை திறந்தவெளி பாராக பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. இதனால் அங்கு காரியம் செய்ய பொதுமக்கள் வருவதற்கு அச்சப்படுகின்றனர். காரிய மேடையை சுற்றி வெளிநபர்கள் உள்ளே வராத வகையில் சுற்றுச்சுவர் அமைத்து, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அதே போல் காரிய மேடையை பராமரிக்க ஒரு பராமரிப்பாளரை நியமிக்க வேண்டும்.
பள்ளங்களை சீரமைக்க வேண்டும்
நகராட்சியில் குப்பைகள் முறையாக அகற்றப்படுகிறதா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். பிஞ்சியில் உள்ள நவீன எரிவாயு தகனமேடை பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் இணைப்பு பணிகளை நகராட்சி அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிப்பதோடு, குடிநீர் பைப்லைன் புதைக்க தோண்டப்படும் பள்ளங்களை முறையாக சாலை அமைக்கும் வரை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மூடி சீரமைக்க வேண்டும்.
மேலும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களை பிடித்து முறையாக கருத்தடை செய்ய வேண்டுமென கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
கோரிக்கைகளை கேட்டறிந்த நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், கவுன்சிலர்களின் கோரிக்கைகளை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து கூட்டத்தில் நகராட்சியில் குடிநீர் குழாய் இணைப்புகள் பழுதை சீரமைப்பது உள்பட 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.