சிதம்பரம் அருகே, இடப்பிரச்சினையால் விஷம் குடித்த பெண் சாவு


சிதம்பரம் அருகே, இடப்பிரச்சினையால் விஷம் குடித்த பெண் சாவு
x

சிதம்பரம் அருகே, இடப்பிரச்சினையால் விஷம் குடித்து பெண் உயரிழந்தார். அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்


சிதம்பரம்,

சிதம்பரம் அருகே உள்ள வடக்கு தில்லைநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகுரு(வயது 50). இவருடைய மனைவி செல்வமணி (43). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினர் ஒருவரது குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் செல்வமணியை அவர்கள் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் வைத்து விஷத்தை குடித்து விட்டார்.

மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெண் சாவு

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாலகுரு மற்றும் குடும்பத்தினர் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில் தனது மனைவி செல்வமணியை, பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினர் ஆபாசமாக திட்டியதால் மனமுடைந்து விஷம் குடித்து விட்டார். எனவே மனைவியை திட்டியவர்கள் மீது நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வமணி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை சிதம்பரம் அடுத்த வண்டிகேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் செல்வமணியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். அப்போது போலீசாருக்கும், செல்வமணியின் உறவினர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையேற்ற அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் சிதம்பரம் - கடலூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story