செஸ் ஒலிம்பியாட்: கடைசி பெண் வீரரை உற்சாகமாக வழி அனுப்பி வைத்த போலீசார்
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று நாடு திரும்பும் கடைசி வீராங்கனையை போலீசார் வழி அனுப்பி வைத்தனர்.
சென்னை:
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளில் இருந்து 2200 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
போட்டி நிறைவடைந்த நிலையில் செஸ் வீரர்கள் தங்கள் நாட்டிற்கு சென்றனர். இந்த நிலையில் தமிழகத்தை விட்டு தங்கள் நாட்டிற்கு செல்லும் கடைசி சர்வதேச வீராங்கனையான நைஜீரியாவைச் சேர்ந்த டோரிட் செமுவா ஒபோவினோவை வழியனுப்ப தமிழ்நாடு காவல்துறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் நைஜீரியா வீரர் டோரிட் செமுவா ஒபோவினோவை செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு சுகுனா சிங் தலைமையில் போலீசார் வழியனுப்பி வைத்தனர்.
அப்போது செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் தேவிகா நைஜீரியா வீரர் டோரிட் செமுவா ஒபோவினோவை கட்டி தழுவி வழியனுப்பி வைத்தார்.
பின்னர் நைஜீரியா வீரர் டோரிட் செமுவா ஒபோவினோ நிருபர்களிடம் கூறுகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்தேன். தமிழக போலீசார் மிகவும் சிறப்பாக பணியாற்றினார். உடல் நல குறைவினால் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட போது டாக்டர்கள் நன்றாக கவனித்து கொண்டனர். தமிழகத்திற்கு வந்ததை மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.