பயணி தவறவிட்ட ரூ.17 லட்சம் நகைகளை ஒப்படைத்த போலீசார்
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறிவிட்ட ரூ.17 லட்சம் நகைகளை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறிவிட்ட ரூ.17 லட்சம் நகைகளை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
ரூ.17 லட்சம் நகைகள்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு நேற்று காலையில் 6.30 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தது. பின்னர் அதில் இருந்து ஏராளமான பயணிகள் இறங்கி சென்றனர். சிறிது நேரத்திற்கு பின்னர் ரெயில் பெட்டிகளில் போடப்படும் வழக்கமான சோதனைக்காக ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிகுமார் ஏட்டுகள் ராதா, சுப்பிரமணியன் ஆகியோர் சென்றனர்.
அப்போது ரெயில் உள்ள ஒரு பெட்டியில் பெண்கள் பயன்படுத்தும் ஒரு கைப்பை இருந்தது. அதில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள 44 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1,500 ஆகியவை இருந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் உடனே ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வியிடம் ஒப்படைத்தனர். உடனே இன்ஸ்பெக்டர் அந்த கைப்பையை தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ஆகியோரிடம் கொடுத்து சரிபார்த்தனர்.
ஒப்படைப்பு
இதைத்தொடர்ந்து அந்த பெட்டியில் பயணம் செய்தவர்கள் யார்? இந்த கைப்பை யாருக்கு சொந்தமானது என போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த ஹக்கீம் (வயது34) என்பவர் தனது குடும்பத்தினருடன் நெல்லை வந்த போது கைப்பையை தவறவிட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த குடும்பத்தினரை ரெயில் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி தவறவிட்ட நகைகள் அடங்கிய கைப்பையை போலீசார் ஒப்படைத்தனர்.