திருத்தணி அருகே தொழிலாளியை தாக்கிய ஆட்டோ டிரைவருக்கு போலீசார் வலைவீச்சு


திருத்தணி  அருகே தொழிலாளியை தாக்கிய ஆட்டோ டிரைவருக்கு போலீசார் வலைவீச்சு
x

திருத்தணி அருகே தொழிலாளியை தாக்கிய ஆட்டோ டிரைவருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளியமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வள்ளியமாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தபோது, பி.டி. புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவகுமார் என்பவர் குடிபோதையில் அர்ஜூனனை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். ஏன் என்னை திட்டுகிறாய் என அர்ஜூனன் கேட்டதற்கு சிவகுமார் தனது நண்பர்களை வரவழைத்து அவரை கட்டையால் தாக்கி, ஏரி அருகிலுள்ள சேற்றில் வீசி சென்றதாக கூறப்படுகிறது.

கணவர் அர்ஜூனன் அடிப்பட்டு கிடக்கும் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி ஜமுனா தனது பிள்ளைகளுடன் விரைந்து சென்று படுகாயம் அடைந்த அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

அங்கு உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜமுனா அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் ஆட்டோ டிரைவர் சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story