கோவையில் கார் வெடித்து பலியான முபின் உறவினர் போலீசார் வீட்டில் போலீசார் சோதனை...!
கோவையில் கார் வெடித்து பலியான முபின் உறவினர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
கோவை,
கோவையில் தீபாவளி பண்டிகையின்போது பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டு, அது தோல்வியில் முடிந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை கோட்டை மேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாளான 23-ந்தேதி காரில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அதே பகுதியில் வசித்து வந்த ஜமேஷா முபின் (வயது 29) என்பவர் உடல் கருகி பலியானார். இதையடுத்து போலீசார் 9 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், கார் வெடித்து பலியான ஜமேஷா முபினின் உறவினர் அப்சல்கான் (வயது 28), எலக்ட்ரீசியனாக பணியாற்றுகிறார். இவரது வீடு உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ளது. நேற்று இரவு இவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். வீட்டில் இருந்து அப்சல்கானை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இன்று காலை மீண்டும் அப்சல்கான் வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் ஒரு லேப்-டாப்பை மட்டும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.
அந்த லேப்-டாப் அப்சல்கானின் மகள் படிப்பதற்காக வாங்கப்பட்டது என கூறப்படுகிறது. லேப்-டாப்பில் எதுவும் தகவல்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக போலீசார் அதனை எடுத்துச் சென்றனர்.