வாலிபரை தாக்கிய போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்


வாலிபரை தாக்கிய போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்
x

களம்பூர் அருகே வாகனங்களை நிறுத்தி பணம் கேட்டு வாலிபரை தாக்கிய போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை

ஆரணி

களம்பூர் அருகே வாகனங்களை நிறுத்தி பணம் கேட்டு வாலிபரை தாக்கிய போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

வாகன தணிக்கை

களம்பூர் அருகே போளூர் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் இன்று பகலில் களம்பூர் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது வேட்டவலத்தை அடுத்த செனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்களான ராஜா, அவரது தம்பி சுரேஷ் ஆகிய இருவரும் மினிவேனில் வேலூர் பகுதியில் உள்ள பொய்கை மாட்டு சந்தைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

எட்டிவாடி கூட்ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த களம்பூர் போலீசார் ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது பின்னால் வந்த வாகனங்களை விட்டுவிட்டு, ராஜா- சுரேஷ் வந்த மினிவேனை அனுப்பாமல் நிறுத்தி உள்ளனர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆரணியைச் சேர்ந்த களம்பூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் விக்னேஷ் வேனில் இருந்த ராஜாவை தான் வைத்திருந்த சாவியால் தாக்கியதாக தெரிகிறது.

போலீசாரை கண்டித்து சாலை மறியல்

இதில் படுகாயம் அடைந்த ராஜா அக்கம் பக்கத்தில் இருந்த வாகனங்களின் டிைரவர்களையும், பொதுமக்களையும் அழைத்து பேசி கொண்டிருந்தார். அப்போது சிலர் போலீஸ்காரர் விக்னேசை தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் ஒன்று கூடி போலீசாரை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆயுதப்படைக்கு மாற்றம்

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் போலீஸ்காரர் விக்னேசை ஆயுதப்படைக்கு மாற்றுவதற்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் விக்னேசை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story