குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்


குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 4 May 2023 5:34 PM GMT (Updated: 4 May 2023 5:35 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

குண்டும், குழியுமான சாலை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மண்டலவாடி ஊராட்சி கவுண்டப்பனூர் பகுதியில் இருந்து ஆலங்காயம் ஒன்றியம் பெத்தவேப்பம்பட்டு அருகே வரை உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையில் பல வருடங்களாக சுமார் 600 மீட்டர் தொலைவிற்கு குண்டும் குழியுமாக உள்ளது இந்த சாலையில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடந்து செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.

இதனால் இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இந்த சாலையில் உள்ள 600 மீட்டர் தொலைவானது இரண்டு ஒன்றியங்களுக்கு இடைப்பட்ட பகுதி என்பதால் எந்த ஒன்றியம் அதை பணி மேற்கொள்வது என்ற இழுபறி இருந்து வந்தது.

கலெக்டா் ஆய்வு

இதுகுறித்து நேற்று முன்தினம் அப்பகுதியில் ரேஷன் கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன், க.தேவராஜி எம்.எல்.ஏ. ஆகியோரிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து பழுதடைந்துள்ள சாலையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தேவராஜி எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் சாலையை சீரமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இந்த சாலையை சீரமைப்பதற்கான பணியில் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆய்வின்போது மாவட்ட கவுன்சிலர்கள் கவிதா தண்டபாணி, சிந்துஜா ஜெகன், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் எம்.மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் கே.ஜி.சரவணன், உள்ளிட்ட துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story