சிமெண்டு விலையை குறைக்க வேண்டும்


சிமெண்டு விலையை குறைக்க வேண்டும்
x

பெரம்பலூரில் சிமெண்டு விலையை குறைக்க வேண்டும் என அகில இந்திய கட்டுனர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் அகில இந்திய சங்கத்தின் பெரம்பலூர் மைய கூட்டமும், கட்டுனர்கள் தினவிழாவும், துறைமங்கலம் நான்குசாலை சந்திப்பு அருகே உள்ள ஓட்டல் எம்.எஸ்.ஆர். கூட்டஅரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் பொறியாளர் ஜோதிவேல், பொருளாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இந்தியாவில் கட்டுமான தொழிலில் கட்டுனர்கள் சந்திக்கும் சவால்கள், எதிர்கொள்ளவேண்டிய திறன்கள் குறித்து பேசினார். முன்னதாக அவர் கண்மணி என்ற ஏழைபெண்ணுக்கு சிறுவணிகம் செய்ய உதவியாக தள்ளுவண்டியை சங்கம் சார்பில் இலவசமாக வழங்கினார். இதில் மாநில திறன்மேம்பாட்டுக்குழு தலைவர் பொறியாளர் சார்க். ராஜாராம், சங்கத்தின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும், சுற்றுலா கமிட்டி நிர்வாகி பொறியாளர் பாலமுருகன், நம்மை புதுப்பித்துக்கொள்ள சுற்றுலா செல்வதன் அவசியம் குறித்தும், பொறியாளர் சிவராஜ் சுற்றுச்சூழலை பாதுகாக்க நன்றாக வளர்ந்த பெரிய மரக்கன்றுகளை நடுவதன் அவசியம் குறித்தும் பேசினர். மாநில கமிட்டி (டி.டி.சி.பி.) துணைத்தலைவர் நந்தகுமார், முன்னாள் நகர்மன்றத்தலைவர் எம்.என்.ராஜா, அகில இந்திய கன்சல்டிங் சிவில் என்ஜினீயர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு முழுவதும் சிமெண்டு விலையை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கட்டுனர் தின கமிட்டி நிர்வாகிகள் கோபிநாத், பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story