பூக்கள் விலை கடும் உயர்வு
ஆவணி மாத கடைசி சுப முகூர்த்தநாளை முன்னிட்டு பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்றது.
சுபமுகூர்த்த நாள்
தமிழ் மாதங்களில் ஆவணி மாதங்களில் சுபமுகூா்த்த நாள் அதிகமாக காணப்படும். இதில் திருமண நிகழ்ச்சிகள் உள்பட சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டில் ஆவணி மாதம் கடந்த ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி பிறந்தது முதல் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெற்றன. அதிலும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை விசேஷ நாளாகும். இந்த நிலையில் இன்று ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. மேலும் இன்று சுப முகூர்த்த நாளாகும். புரட்டாசி மாதம் நாளை (திங்கட்கிழமை) பிறக்கிறது. இந்த மாதத்தில் திருமணம் உள்பட சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறாது. ஆன்மிக மாதமான புரட்டாசியில் பக்தர்கள் விரதம் இருந்து பெருமாள் கோவில்களில் வழிபாடு நடத்துவார்கள். இந்த நிலையில் ஆவணி மாதத்தில் கடைசி சுப முகூர்த்த நாளையொட்டி இன்று திருமணம் உள்பட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. சுப முகூர்த்தநாளையொட்டி புதுக்கோட்டையில் நேற்று பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. திருமணம் மற்றும் கோவில் விழாக்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு பூக்கள் அதிகம் தேவைப்பட்டதால் அவற்றின் விலை கிடு கிடுவென உயர்ந்தது.
மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரம்
புதுக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை நேற்று அமோகமாக நடைபெற்றது. மல்லிகை பூ கிலோ நேற்று முன்தினம் ரூ.700-க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று கிலோ ரூ.2 ஆயிரமாக உயர்ந்தது. இருப்பினும் மல்லிகை பூ அத்தியாவசிய தேவை என்பதால் பூ வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டிப்போட்டு வாங்கினர். சம்பங்கி கிலோ ரூ.400-க்கும், செவ்வந்தி பூ ரூ.150-க்கும், முல்லை பூ ரூ.1,000-க்கும், ரோஸ் பூ ரூ.300-க்கும் விற்றது.
இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்றும் பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இதேபோல நாளை புரட்டாசி மாதம் பிறப்பதால் பூக்களுக்கு கடும் கிராக்கி இருக்கும். இதனால் சில்லரை விலைகளில் பூக்கள் விற்பனை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
முல்லை பூ கிலோ ரூ.1,000
கீரமங்கலம் மலர் கமிஷன் கடைகளுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 5 முதல் 10 டன் வரை மல்லிகை, முல்லை, கனகாம்பரம், காட்டுமல்லி, சம்பங்கி, ரோஜா, அரளி, சென்டி என அனைத்து வகையான பூக்களும் விற்பனைக்கு வரும் நிலையில் பண்டிகை, திருவிழா, சுபமுகூர்த்த நாட்களில் அதிக விலைக்கு விற்பனை ஆகும். மற்ற நாட்களில் சராசரியான விலை கிடைக்கும். பல நாட்கள் விற்பனை ஆகாமல் பூக்கள் குப்பையில் கொட்டும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் மல்லிகை பூ கிலோ ரூ.80-க்கும், சம்பங்கி பூ ரூ.20, ரூ.30-க்கும் விற்பனை ஆனது. ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு டன் பூக்கள் விற்பனை ஆகாமல் குப்பைக்கு போனது. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆவணி மாத கடைசிசுபமுகூர்த்த நாள் என்பதால் நேற்று பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதாவது மல்லிகை, முல்லை பூ கிலோ ரூ.1,000, கனகாம்பரம், சம்பங்கி பூ கிலோ ரூ.400, காட்டுமல்லி பூ கிலோ ரூ.500-க்கும் விற்பனை ஆனது. இதேபோல நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி என்பதால் இன்றும் பூக்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.