திண்டுக்கல்லில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு


திண்டுக்கல்லில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 27 Oct 2022 6:45 PM GMT (Updated: 27 Oct 2022 6:46 PM GMT)

திண்டுக்கல்லில் நேற்று பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.1,500-க்கு விற்றது.

திண்டுக்கல்

பூக்கள் விற்பனை

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அண்ணா பூ மார்க்கெட் உள்ளது. திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்படும் பூக்களை, விவசாயிகள் அங்கு கொண்டு வந்து விற்கின்றனர். திண்டுக்கல் மார்க்கெட்டில் இருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த புரட்டாசி மாதத்தில் திருமண விழாக்கள் அதிகம் நடைபெறாததால் பூக்கள் விற்பனை மந்தமாக இருந்தது.

ஜப்பசி மாதம் பிறந்தது முதல் பூக்களின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது. இதற்கிடையே இன்று (வெள்ளிக்கிழமை) திருமண முகூர்த்தநாள் ஆகும். இதையொட்டி விவசாயிகளும் அதிக அளவில் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதேநேரம் திண்டுக்கல் மார்க்கெட்டில் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் குவிந்தனர். இதனால் பூக்களின் விற்பனை அதிகரித்து விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.

விலை உயர்வு

அதன்படி கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்ற சம்பங்கி நேற்று ரூ.150-க்கும், ரூ.10-க்கு விற்ற ரோஜா ரூ.80-க்கும், ரூ.600-க்கு விற்ற மல்லிகைப்பூ ரூ.1,500-க்கும் விற்பனை ஆனது. இதுதவிர கோழிக்கொண்டை ரூ.60-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும், ஜாதிப்பூ ரூ.350-க்கும், காக்கரட்டான் ரூ.500-க்கும், முல்லை பூ ரூ.550-க்கும், அரளி ரூ.250-க்கும் விற்பனையானது.


Next Story