பூக்கள் விலை கிடு கிடு உயர்வு; மல்லிகை கிலோ ரூ.1,500-க்கு விற்பனை


பூக்கள் விலை கிடு கிடு உயர்வு; மல்லிகை கிலோ ரூ.1,500-க்கு விற்பனை
x

புதுக்கோட்டையில் பூக்கள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ.1,500-க்கு விற்பனையானது.

புதுக்கோட்டை

பூ மார்க்கெட்

புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பூக்களை விற்பனைக்காக கொண்டு வருவது உண்டு. மேலும் பூ வியாபாரிகளும் வந்து பூக்களை மொத்தமாக ஏலம் எடுத்து செல்வார்கள். பொதுமக்களும் பூக்கள் வாங்க நேரிடையாக இந்த மார்க்கெட்டிற்கு வருவது உண்டு. பண்டிகைகாலங்களில் இந்த பூ மார்க்கெட்டில் பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை பழைய பஸ் நிலைய பூ மார்க்கெட்டில் நேற்று கூட்டம் அலைமோதியது. மேலும் பூக்கள் வரத்தும் அதிகமாக இருந்த நிலையிலும் விலை கிடு கிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் மல்லிகை பூ கிலோ ரூ.1,200-க்கு விற்பனையான நிலையில் ரூ.300 அதிகரித்து ரூ.1,500-க்கு விற்றது.

சம்பங்கி பூ

இதேபோல் முல்லை கிலோ ரூ.750-ல் இருந்து ரூ.150 உயர்ந்து ரூ.900-க்கு விற்றது. ஜாதி பூ கிலோ ரூ.900-ல் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. ரூ.120-க்கு விற்ற செவ்வந்தி ரூ.150-க்கும், ரூ.70-க்கு விற்ற சம்பங்கி ரூ.110-க்கும், அரளிபூ ரூ.350-க்கும் விற்பனையானது. இதேபோல மற்ற பூக்களின் விலையும் சற்று உயர்ந்திருந்தது.

பண்டிகையையொட்டி வீடுகள் மற்றும் கோவில்களில் வழிபாடு நடத்துவதற்காக பூக்கள் பயன்படுத்தப்படுவதால் பூக்கள் விலை சற்று உயர்ந்துள்ளது.


Next Story