கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை சற்று குறைந்தது


கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை சற்று குறைந்தது
x

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை சற்று குறைந்து கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

போரூர்,

சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் இறுதி வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கும் குறைவாகவே விற்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைய தொடங்கியதால் விலை திடீரென அதிகரித்தது.

கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும், வெளி மார்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரையிலும் விற்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் விலை சற்று குறைந்துள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கும், சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கும் விற்கப்படுகிறது.

இதுகுறித்து மொத்த வியாபாரி கூறும்போது :-

தக்காளி உற்பத்தி நடக்கும் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த செடிகளில் உள்ள தக்காளி சேதமடைந்து வீணாவதை தடுத்திடும் வகையில் விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்து வருகின்றனர். இதன் காரணமாகவே தற்போது தக்காளி வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

பெரும்பாலான தக்காளி மழையால் சேதமடைந்த நிலையில் தான் உள்ளது. நேற்று 57 லாரிகள் வரை வந்த நிலையில் இன்று 49 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் இனி வரும் நாட்களில் தக்காளி விலை அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story